பலகை

செப்ரெம்பர் 25, 2006

படிக்கட்டுப் பயணம்

Filed under: கவனித்தவை,சமுதாயம் — சுப்புடு @ 7:57 பிப

இன்று பேருந்தில் பயணம் செய்யும்போது, திடீரென ஒரு நிறுத்தத்தில் பேருந்தின் முன்பகுதியில் கூச்சல், குழப்பம். வண்டியை ஓரமாக நிறுத்தி இன்ஜினை நிறுத்திய ஓட்டுனர், படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு விடலைச் சிறுவனை ‘பளார்’ என்று ஒரு அறை விட்டார். அடுத்து அவனை வண்டியிலிருந்து கீழே தள்ளி அடித்து அடித்தே பேருந்தின் பின் வாயில் வரை ரோட்டில் தள்ளி வந்தும் விட்டார்.

விஷயம் வழக்கமானதுதான் – படிக்கட்டுப் பயணம்! ஆனால் எல்லாரும் செய்யும் ஒரு விஷயத்திற்கு பையனின் வயது காரணமாக – கண்டிக்கத்தக்கதே ஆனாலும் – இப்படி தண்டிக்க வேண்டுமா என்று தோன்றியது. வண்டியின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்த நான், ஓட்டுனரிடம் “அடிக்காதீர்கள்” என்று சொல்லிப் பார்த்தேன். பலனில்லை. ஆச்சரியமாக, அடித்து அறிவுரை சொன்ன ஓட்டுனர் அந்தப் பையனை டிக்கெட் வாங்கியுள்ளானா என்று நடத்துனரிடம் உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் பேருந்தில் ஏற அனுமதித்தார்.

அவமானத்தில் குறுகி நின்ற அந்தப்பையனிடம், தனது பங்கிற்க்கு அறிவுரையை தொடர்ந்தார் நடத்துனர். அப்போது, பின் படிக்கட்டில் மேலும் சில இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அச்சிறுவனை விட சில வருடங்களே அதிகம். நடத்துனரிடம், நான் கேட்டேன்: “அந்தப்பையனுக்குக் கிடைக்கும் முன்னுதாரணங்களைப் பாருங்கள்! அவர்கள் அப்படிப் பயணம் செயவதை, மேலும் அதை நீங்கள் அனுமதிப்பதைப் பார்த்துதானே அவன் வளர்கிறான். அப்படியிருக்க அவனை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்?!”. நடத்துனர் ஏதும் பதில் சொல்லவில்லை.

Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.